க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் உயிரிழப்பு!

க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (மார்ச் 31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா பகுதியில் திட்டமிடப்பட்ட வழக்கமான பயணத்தில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் முடிவில், விமானம் விபத்துக்குள்ளான சிதைந்த பகுதிகள் கண்டறியப்பட்டன.

விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்களை ஆய்வு செய்த பாதுகாப்பு அமைச்சகம், முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

விமானம் வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான தடயங்கள் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க ரஷ்ய பாதுகாப்பு அமைச்சினால் விசேட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் சிதைந்த பாகங்களைச் சேகரித்து, கருப்புப் பெட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்த விமான விபத்து சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *