இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த நிர்வாகத்தை இடைக்கால குழுவிடம் வழங்க ஆலோசித்து வருவதாக விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2026 ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூரிய விலகினார்.
இந்நிலையில், ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தை இராஜினாமா செய்யக்கோரி இலங்கை கிரிக்கெட் தலைமையகம் முன்பு கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவின் பதவிக்காலம் 2027 மே வரை உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இலங்கை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைத்து கட்டியெழுப்ப இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஐசிசி உடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஐசிசி உடனான இந்த பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐசிசியிடமிருந்து மீண்டும் தடை விதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ள முடியாது என்பதால் ஐசிசியுடன் இணக்கமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

