ஐக்கிய அரபு அமீரகத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிச் சென்ற கேப்டன் சயீத் அல் பலூஷி மற்றும் முதல் லெப்டினன்ட் அலி அல் துனைஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்களின் உடல்கள் ஜாயித் ராணுவ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின், அமீரக தேசியக் கொடி போர்த்தப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டன.
இந்த இழப்பு குறித்து அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பாதுகாப்பிற்காக இன்னுயிரை ஈந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவர்களுக்குப் பொறுமையையும் ஆறுதலையும் வழங்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி, தங்களது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

