இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை எந்தவிதக் கட்டணமுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் தங்களின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் வெளியேற முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை வந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு, 14 நாட்கள் காலப்பகுதிக்கு எந்தவிதக் கட்டணமுமின்றி விசா காலம் நீடிக்கப்படும்.

விமானப் பயணங்கள் தொடர்ந்து இரத்துச் செய்யப்படும் நிலை நீடித்தால், இவர்களின் விசா காலத்தை மேலும் 14 நாட்கள் வரை கட்டணமின்றி நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் வரை, அவர்களை இலங்கையில் சட்டபூர்வமாகத் தங்க வைப்பதை உறுதி செய்வதே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *