அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள மாட்டோம் – ஈரான் ஒப்புதல்: டிரம்ப்

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அங்குள்ள எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்தது. இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்தது. அதேவேளையில், பதற்றத்தை தணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது: “நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். மற்றொரு பக்கம் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறோம். ஈரானின் அனைத்து விமான எதிர்ப்பு அமைப்புகளும், பெரும்பாலான ஏவுகணைகளும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. உலகிலேயே மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி நிலையங்களில் ஒன்றை துல்லியமாக தாக்கும் வாய்ப்பு எங்களிடம் இருந்த போதிலும், பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பதால் அதை நிறுத்தி வைத்துள்ளோம். அணு ஆயுதங்களை வைத்திருக்கப் போவது இல்லை என்று ஈரானும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.ஈரானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *