அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதன்போது தொடரப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதில் வழங்கவுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிப்பாடுகள் குறித்த முன்னேற்றங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
அத்துடன், இன மற்றும் மத அடிப்படையில் சிறுபான்மை மக்கள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகள், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலைமை, இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் சமரசம் ஆகிய விடயங்கள் குறித்தும் அவதானிக்கப்படவுள்ளது.

