ட்ரம்ப் ஒரு சைத்தான் – சாடுகிறார் காரியப்பர்

‘‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சைத்தான். இந்த சைத்தானால்தான் உலகில் அமைதி இல்லாமல்போயுள்ளது. இந்த சைத்தான் தொடர்பில் எமது ஜனாதிபதி அநுரகுமார ஒரு வரி கூட கண்டித்துப் பேசாதமையால் அவருக்கு வாக்களித்த முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள். இன்று கிரீன்லாந்தை கேட்கும் ட்ரம்ப் எனும் சைத்தான் நாளை திருகோணமலையையும் கேட்கும்’’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

‘‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான். இவர்கள் இருவரும் தான் இன்று முழு உலகின் அமைதிக்கும் பெறும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஈரானில் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட தலைமைத்துவத்தை சர்வதேச சட்டத்துக்கு முரணாக செயற்பட்டு இவர்கள் கொலை செய்துள்ளார்கள்.

இந்த பெரிய சைத்தான் மனித படுகொலைகளை செய்து விட்டு விளையாட்டுப் போட்டிக்கு செல்லும்போது அணியும் தொப்பியை அணிந்து கொண்டு ஊடகங்களுக்கு பேசுகிறது. அவரது கருத்துகளை கேட்கும்போதும், பார்க்கும் போதும் மிகவும் ஆத்திரமாகவுள்ளது. ஆனால் இலங்கை ஜனாதிபதி இந்த சைத்தான்களை கண்டிக்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தோற்றம் பெற்றுள்ள யுத்தத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஜனாதிபதி விடயங்களை முன்வைத்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேசாத அளவுக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த சக்திகளுக்கு அடிபணிந்துள்ளார்கள். உண்மையில் இது நியாயமற்றது.

மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய நிலைமையை முழு உலக நாடுகளும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், சர்வாதிகார சக்திகளின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு ஒட்டுமொத்த மக்களும் இந்த ஜனாதிபதிக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளித்த, வாக்களித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், வெட்கித் தலைகுனிகின்றனர் .

பாராளுமன்றத்தில் கூட ஒரு கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது. நான் அமெரிக்காவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்கப் பிரஜைகளுக்கு எதிராகவோ பேசவில்லை. சர்வதேச சட்டத்துக்கு முரணான ஒரு தனிநபர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு பிறிதொரு நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்குவதையே எதிர்க்கிறோம். இன்று கிரீன்லாந்தை கேட்கும் ட்ரம்ப் எனும் சைத்தான் நாளை திருகோணமலையையும் கேட்கும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *